ரேடியோ எப்.எம் மில் “பக்திப்பாடல்” ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடியே எழுந்துக்கிட்டா அம்மா, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, பால் எடுத்திட்டு வந்து, காய்ச்சி, காலை டிபனுக்கு வேண்டிய காய்களையும், மாவையும் ரெடி பண்ணி ஒரு காபி போட்டு குடிக்கலாம்னு டைனிங் சேர்ல உக்கார நினைக்கும்போது, அப்பா மெல்ல சமயலறை பக்கம் வந்து “எனக்கு ஒரு டீ தர்ரியா”ன்னு கேட்டவுடன் டக்குன்னு போட்டு குடுத்துட்டு, பாப்பாவை எழுப்பிவிட்டு, ஆச்சிக்கு பால் ஆத்திக்குடுத்துட்டு வந்து காபிய வாயில் வைத்தாள், ஆறியிருந்தது, பிறகு சுடவச்சி குடிக்கலாம்னு வச்சிட்டு, சாம்பார் செஞ்சி, பாப்பாவுக்கு மதிய சாப்பாடு ரெடியாக்கி அடைத்து விட்டு, தோசை கல்லை அடுப்பில் வைத்து ...மாவை ஊற்றிவிட்டு, திரும்பினால் பாப்பா “தலயை கெட்டிவிடும்மா”ன்னு
வந்து
நின்றாள். கல் நல்லா காயாததாலோ என்னவோ தோசை வெள்ளையாகவே இருந்தது.
தோசையை தட்டில் எடுத்து வைத்துவிட்டு
அடுத்தடுத்து
தோசை ஊற்றிக்கொண்டே பாப்பா தலையை கட்டிவிட்டு, ஆச்சியை சாப்பிட கூப்பிட்டாள். ஆச்சி தோசை தட்டில் ரெண்டு தோசை எடுத்து சாப்பிட தொடங்கினாள். அடுத்து பாப்பா, அப்புறம் அப்பா..... அதற்குள் ஆட்டோ வரவும், பாப்பாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, அப்பாவும் ஆபீஸுக்கு கிளம்பியவுடன் ஆச்சிக்கு மருந்து எடுத்து குடுத்துட்டு அப்பாடா.... ன்னு உக்காந்ததும் லேசா வயிறு குறுகுறுன்னு பசிக்க ஆரம்பித்தது.
காபிய சுடவச்சி எடுத்துக்கிட்டு, இருந்த மாவில் ஒரு தோசையை ஊற்றிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.
தோசை
தட்டில் இருந்த வெள்ளை தோசையையும் எடுத்து சாப்பிட்டு, காபியையும் குடித்துவிட்டு, பாத்திரங்களை எடுத்து “சிங்க்” உள்ளே போட்டு ............ அடுத்து தயாரானாள் அம்மா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக