செவ்வாய், 15 செப்டம்பர், 2020

இந்த நாள் அந்த வருடம்

அதிகாலை மொட்டை மாடியில் படுத்திருந்த என்னை எழுப்பி "டேய் ராஜிக்கு என்னவோ ஆச்சு, ஊடிப்போய் ஆட்டோ கூட்டிட்டு வா".

திங்கள், 23 மார்ச், 2020

சொல்லாத உண்மையும் சுடும்


ஹைகிரவுண்டு மருத்துவமனை
 அத்தைக்கு அறுவை சிகிட்சை முடிந்து ஆசுபத்திரியில் இருந்தார்கள். பார்க்க சென்றிருந்தேன். முதல் நாள் சென்ற போது அறுவை சிகிட்சை மயக்கத்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்  பிறகு பார்க்கலாம் என்று வந்து விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஆஸ்பத்திரி சென்றபோது. அத்தை நன்கு தெளிந்த்திருந்தார்.
மெல்ல பேச்சு கொடுத்தேன், ' ஏன் அத்தை , அன்று என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தீர்களே? என்றேன் .
 சட்டென "அது ஒன்னும் இல்ல மருமகனே ! ' என்று  இந்த கதையை சொன்னார்.

அப்போது நான் திருச்செந்தூரில் பணி செய்து கொண்டிருந்தேன். வழக்கமாக கோவிலுக்கு செல்வேன் , அப்படி ஒரு நாள் கோவிலுக்கு சென்றபோது ஒரு சாமியாரிடம் ஜோசியம்  கேட்டேன் . ஜோசியத்தில் எனக்கு பிள்ளைப்பேறு கிடையாது என்று சொன்னார். ஆனால் அப்போதே எனக்கு குமாரி இரண்டு வயது பிள்ளை. நான் எதுவும் சொல்லாமல் வந்து விட்டேன்.
அதன் பிறகு சில காலம் ( மாதங்கள் ) கழித்து என் மகளுடன் கடை கோவிலுக்கு சென்றபோது சாமியாரை பார்க்க நேர்ந்தது . சாமி என்னிடம் "இது உங்s அக்கா மகளா?" என்று கேட்டார் . நானும் "ஆமாம்" என்றோ இல்லை என்றோ சொல்லாமல்  வெறுமே தலையாட்டிவிட்டு வந்தேன்.
அதன் பிறகு கோயிலில் சாமியார் இருக்கும் பகுதிக்கு போனதில்லை, என்றாலும் குமாரியை எங்கும் தனியாக அனுப்ப பயந்தேன் . எங்கே நம் மகள் நம்மை விட்டு போய்விடுவாளோ என மனதுக்குள் பயந்தேன், என்று கதையை கூறியவர், அறுவை சிகிட்சை முடிந்து இருந்தபோது இந்த நினைவு அதிகமாக இருந்தது.
அன்றே அந்த சாமியாரிடம் "இவள் என் மகள்" என்று சொல்லாமல் விட்டுவிட்டோமே? என்று எப்போதும் வரும் வருத்தம் வந்தது " என்று முடித்தார்.

 இப்போது குமாரிக்கு  முப்பதைத் தாண்டி வயதும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உண்டு.

ஆச்சரியம் என்னவென்றால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்தும் , ஒரு நல்ல மனதை , சொல்லாத ஒரு உண்மை சுட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறது.
                  ஜோஜோ(ஜோதி)

முதல் தோசை அம்மாவுக்கு...


ரேடியோ எப்.எம் மில் “பக்திப்பாடல்ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடியே எழுந்துக்கிட்டா அம்மா, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, பால் எடுத்திட்டு வந்து, காய்ச்சி, காலை டிபனுக்கு வேண்டிய காய்களையும், மாவையும் ரெடி பண்ணி ஒரு காபி போட்டு குடிக்கலாம்னு டைனிங் சேர்ல உக்கார நினைக்கும்போது, அப்பா மெல்ல சமயலறை பக்கம் வந்துஎனக்கு ஒரு டீ தர்ரியான்னு கேட்டவுடன் டக்குன்னு போட்டு குடுத்துட்டு, பாப்பாவை எழுப்பிவிட்டு, ஆச்சிக்கு பால் ஆத்திக்குடுத்துட்டு வந்து காபிய வாயில் வைத்தாள், ஆறியிருந்தது, பிறகு சுடவச்சி குடிக்கலாம்னு வச்சிட்டு, சாம்பார் செஞ்சி, பாப்பாவுக்கு மதிய சாப்பாடு ரெடியாக்கி அடைத்து விட்டு, தோசை கல்லை அடுப்பில் வைத்து ...மாவை ஊற்றிவிட்டு, திரும்பினால் பாப்பாதலயை கெட்டிவிடும்மான்னு  வந்து நின்றாள். கல் நல்லா காயாததாலோ என்னவோ தோசை வெள்ளையாகவே இருந்தது.
தோசையை தட்டில் எடுத்து வைத்துவிட்டு  அடுத்தடுத்து தோசை ஊற்றிக்கொண்டே பாப்பா தலையை கட்டிவிட்டு, ஆச்சியை சாப்பிட கூப்பிட்டாள். ஆச்சி தோசை தட்டில் ரெண்டு தோசை எடுத்து சாப்பிட தொடங்கினாள். அடுத்து பாப்பா, அப்புறம் அப்பா..... அதற்குள் ஆட்டோ வரவும், பாப்பாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, அப்பாவும் ஆபீஸுக்கு கிளம்பியவுடன் ஆச்சிக்கு மருந்து எடுத்து குடுத்துட்டு அப்பாடா.... ன்னு உக்காந்ததும் லேசா வயிறு குறுகுறுன்னு பசிக்க ஆரம்பித்தது.
காபிய சுடவச்சி எடுத்துக்கிட்டு, இருந்த மாவில் ஒரு தோசையை ஊற்றிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.  தோசை தட்டில் இருந்த வெள்ளை தோசையையும் எடுத்து சாப்பிட்டு, காபியையும் குடித்துவிட்டு, பாத்திரங்களை எடுத்துசிங்க்உள்ளே போட்டு ............ அடுத்து தயாரானாள் அம்மா.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஊடல் – காமம் - காதல்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
இது வள்ளுவனின் கடைசி குறள்.
சரிதான்....
பென்களுக்கு,  அந்த மூன்று நாட்களில் தங்களை மீறிய ஒரு கோபம் வருகிறதே,  அப்போது தம்பதியருக்குள் ஊடல் ஏற்பட்டால்.........
மூன்று நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாமென்றோ, தீட்டு நாட்கள் என்றோ தமக்குள் ஒடுங்கிவிடாமல், துணையை ஒதுக்கிவிடாமல்...எதையும் பொருட்படுத்தாமல்
“இறுக்கி அணைச்சு ஒரு உம்ம” கொடுத்துப்பாருங்கள்..
ஊடுதல் காமத்துக்கு மட்டுமல்ல காதலுக்கும் இன்பம்தான்......

புதன், 8 ஜனவரி, 2020

நாரை விடு தூது

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"


- சத்திமுத்தப்புலவர்

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்ததாகிப்போனதற்க்கு இரண்டு  காரணம் உண்டு.
1. நமக்கு பிடித்த பனங்கிழங்கை நாரையின் அலகுக்கு (வாய்க்கு) ஒப்பிட்டு கூறுவது.
2. புலவனின் ஏழ்மை நிலையை நம் மனத்தில் அப்படியே கொண்டு வருவது. 

இதுக்கெல்லாம் அப்பால் நமக்கு தனிப்பட்ட முறையில் ஒன்று உண்டு, அது எங்களது உயர் மட்ட அதிகாரிகளை சந்திக்க செல்லும் கடை  நிலை அதிகாரிகளின் கதியும் கிட்டத்தட்ட புலவனின் நிலைதான்.